பெரம்பலூர்
அலுவலக உதவியாளர் பணி மீண்டும் வழங்காததால் வாலிபர் தற்கொலை முயற்சி
|வாலிகண்டபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் அலுவலக உதவியாளர் பணி மீண்டும் வழங்காததால் வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உதவியாளர் பணி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜெனுதீன். இவரது மகன் சம்சுதீன் (வயது 30). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாலிகண்டபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். மேலும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக பணிக்கு செல்லவில்லையாம். இதனால் சம்சுதீன் பதிலாக வேறோருவர் கடந்த ஒரு வருடமாக வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தார். அவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டதால், தற்போது வங்கியில் வாலிகண்டபுரத்தை சேர்ந்த மற்றொருவரை பணியில் சேர்த்துள்ளனர்.
தற்கொலை முயற்சி
சம்சுதீன் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாகவும், தற்பொழுது தனக்கு மீண்டும் பணி வழங்குமாறு வங்கி மேலாளரிடம் கேட்டு வந்தும், அவரும் மீண்டும் பணி வழங்கப்படவில்லையாம். இதனால் சம்சுதீன் நேற்று இரவு வங்கிக்கு சென்று மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பணி வழங்கப்படாததால் மனமுடைந்த சம்சுதீன் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.