விழுப்புரம்
கரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலன் கண்எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|கரும்பு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது காதலனை தாக்கிவிட்டு அவரது கண் எதிரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயதுடைய மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் காதலித்து வருகிறார்கள். இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்து பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் மாணவியை கரும்பு தோட்டத்துக்கு வருமாறு சிறுவன் அழைத்துள்ளான். அதன்படி மாணவியும் அந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு வந்தார். அங்கு மாணவியும், சிறுவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
காதலன் மீது தாக்குதல்
அப்போது அந்த வழியாக அதே பகுதி்யை சோ்ந்த மணிகண்டன் (வயது 22) என்பவர் வந்தார். கரும்புத்தோட்டத்தில் காதலியும், காதலனும் பேசிக்கொண்டிருந்ததை கண்டார். உடனே அருகில் சென்ற மணிகண்டன், கரும்பால் சிறுவனை தாக்கினார். வலி தாங்க முடியாமல் அவன், அலறி துடித்தான். பின்னர் காதலன் கண் எதிரே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து தப்பிச்சென்று தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.