சென்னை
பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபர் கைது
|பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 25). கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரது கூட்டாளி சுரேஷ், அதே கொலை வழக்கில் சிறையில் உள்ளார்.
நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சுரேசை புழல் சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்தனர். அதே வழக்கில் ஆஜராகுவதற்காக தமிழரசனும் பூந்தமல்லி கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சந்தேகத்தின்பேரில் தமிழரசனை சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சிறையில் இருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தனது கூட்டாளி சுரேசுக்கு கொடுப்பதற்காக அந்த கஞ்சாவை கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.