புதுக்கோட்டை
8 பவுன் சங்கிலி திருடிய வழக்கில் வாலிபர் கைது
|மாத்தூரில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் சங்கிலியை திருடி சென்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தங்க சங்கிலி திருட்டு
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சக்தி நகரில் குடியிருப்பவர் வீரராகவன் (வயது 52). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி இரவு குடும்பத்துடன் அவர்களது வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினர். பின்னர் விடியற்காலை மாடியில் இருந்து கீழ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்குள்ள பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்நிலையில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை மாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் நகர் பகுதியில் ஒரு நபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை சேர்ந்த குஞ்சப்பன் மகன் உத்தமன் (38) என்பதும், இவர் வீரராகவன் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் சங்கிலியை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும் உத்தமன் மீது திருச்சி உறையூர், தஞ்சாவூர் செங்கிப்பட்டி, புதுக்கோட்டை டவுன் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து உத்தமனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட உத்தமனை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.