கோயம்புத்தூர்
இளம்பெண் தற்கொலை முயற்சி
|இளம்பெண் தற்கொலை முயற்சி
உக்கடம்
கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சபீலா (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நவ்ஷாத் (24) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சபீலாவின் பெற்றோர் 10 பவுன் நகையை சீதனமாக கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், சபீலாவின் கணவர் நவ்ஷாத் மற்றும் அவரது குடும்பத்தினர் சபீலாவிடம், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதலாக நகை, பணம் வாங்கி வருமாறு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சபீலா சில நாட்களுக்கு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது கணவர் நவ்ஷாத், மாமனார் மற்றும் மாமியார், சபீலாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சபீலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் சபீலாவின் கணவர் நவ்ஷாத், மாமனார், மாமியார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.