< Back
மாநில செய்திகள்
இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை; நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்
மாநில செய்திகள்

இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை; நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
28 April 2023 2:32 AM IST

நடத்தையில் சந்தேகம் காரணமாக இளம்பெண்ணை அவரது கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

நெல்லை,

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி குன்னத்தூரை சேர்ந்த தர்மராஜ் மகள் சங்கரம்மாள் என்ற அபிராமி (வயது 28).

அதே பகுதியை சேர்ந்த இவரது முறை மாமன் பிரபுராஜா (32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சத்திகா (9) என்ற மகளும், ஜெனித்ராஜ் (7) என்ற மகனும் உள்ளனர். பிரபுராஜா மதுரை அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார்.

நடத்தையில் சந்தேகம்

பிரபுராஜா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். எனவே, கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால் அபிராமி தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பாட்டி ஊரான நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த சத்யாநகருக்கு வந்து வாடகை வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

வெட்டிக்கொலை

நேற்று மதியம் மனைவியை பார்க்க பிரபுராஜா மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்தார். பின்னர் மனைவி வீட்டிற்கு சென்றார். அப்போது மனைவி அபிராமி நெல்லையில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வந்தது தெரியவந்தது.

அபிராமி கடையில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் பிரபுராஜா மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் அபிராமியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அபிராமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரபுராஜாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்