கன்னியாகுமரி
குளச்சல் அருகேகுழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை
|குளச்சல் அருேக 3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். ஜோதிடம் பார்க்க சென்று விட்டு திரும்பிய போது இந்த விபரீத சம்பவத்தில் பெண் ஈடுபட்டுள்ளார்.
குளச்சல்:
குளச்சல் அருேக 3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். ஜோதிடம் பார்க்க சென்று விட்டு திரும்பிய போது இந்த விபரீத சம்பவத்தில் பெண் ஈடுபட்டுள்ளார்.
கடலில் பெண் பிணம்
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டுமடை கடலில் நேற்று மதியம் ஒரு பெண்ணின் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ஒரு வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
மேலும் இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்
அப்போது 3½ வயது குழந்தையுடன் தாய் கடலில் குதித்து தற்கொலை செய்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-
மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடையை சேர்ந்தவர் மெல்பின் (வயது 37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்பவரை காதலித்து திருமணம் ெசய்து கொண்டார். இவர்களுக்கு மெர்ஜித் (3½) என்ற மகன் இருந்தான்.
இந்தநிலையில் நேற்று காலையில் சசிகலா தனது குழந்தை மற்றும் தாயாருடன் ஒரு ஆட்டோவில் காப்புக்காட்டில் உள்ள ஒரு இடத்தில் ஜோதிடம் பார்க்க சென்றார். பின்னர் தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அவர் தனது குழந்தையுடன் அதே ஆட்டோவில் மண்டைக்காடு பகுதிக்கு வந்தார். வரும் வழியில் சாப்பிடுவதற்காக பிரியாணி பொட்டலம் வாங்கியுள்ளார்.
குழந்தையுடன் குதித்து தற்கொலை
மதியம் மண்டைக்காடு அருகே வெட்டுமடை கடல் பகுதிக்கு சென்ற சசிகலா அங்கு ஆட்டோவில் இருந்தபடி பிரியாணியை சாப்பிட்டார். பின்னர் டிரைவரிடம் கையை கழுவி விட்டு வருவதாக கூறிவிட்டு குழந்தையுடன் கடலை நோக்கி சென்றார்.
அதன் பின்பு நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர் பதற்றத்திற்குள்ளானார். டிரைவர் மாற்றுத்திறனாளி என்பதால் ஆட்டோவில் இருந்து இறங்கி அவர்களை தேட முடியவில்லை. இதனால் அங்கு வந்த ஒரு வாலிபரிடம் ஒரு தாயும், மகனும் கடலில் கைகழுவ போனதாகவும், ஆனால் அவர்கள் நீண்ட நேரமாக திரும்ப வரவில்லை என்றும் கூறினார். இதை கேட்ட வாலிபர் விரைந்து சென்று கடலில் பார்த்த போது சசிகலா பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த வாலிபர் கடலில் குதித்து சசிகலாவின் உடலை மீட்டு கரை சேர்த்தார். அதே நேரத்தில் குழந்தையை காணவில்லை. இதனால் குழந்தையும் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் கடலோர காவல் குழும போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையுடன் கடலில் குதித்து சசிகலா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சினையா?
இதற்கிடையே தகவல் அறிந்த சசிகலாவின் குடும்பத்தினர் வெட்டுமடை கடல் பகுதிக்கு பதற்றத்துடன் விரைந்து வந்தனர். அங்கு சசிகலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடும்ப பிரச்சினையால் குழந்தையுடன் கடலில் சசிகலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையுடன் கடலில் குதித்து பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது.