நாமக்கல்
உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
|நாமக்கல் அருகே உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு ராஜபாளையத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பிணம்
நாமக்கல் அருகே வேட்டாம்பாடி பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாததால் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொடங்கினார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயர்மின் கோபுரத்தில் தொங்கி கொண்டு இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர்
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த முத்துபாண்டியன் (வயது27) என்பதும், அவருக்கு மனைவி, ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்து உள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பே அவர் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதும் தெரியவந்து உள்ளது. இருப்பினும் அவர் விருதுநகரில் இருந்து ஏன் நாமக்கல் வந்தார்? தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.