செங்கல்பட்டு
பனையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி வாலிபர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்
|பனையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அந்த பகுதியில் ‘சைக்கிளிங்’ நடத்த தடை விதிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்சன் (வயது 25). இவர், சென்னையில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்றார்.
பனையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சரண் (23) என்பவரது மோட்டார் சைக்கிளுடன் இவரது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
வாலிபர் பலி
இதில் படுகாயம் அடைந்த சரண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த கிட்சனை, மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான சரண், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்த சம்பவம் பற்றிய தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவியது.
பொதுமக்கள் சாலை மறியல்
இதையறிந்த பனையூர் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு விபத்தில் உயிரிழந்த சரண் உடலை, எடுக்கவிடாமல் தடுத்து அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவான்மியூர் முதல் முட்டுக்காடு வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வழி பாதையை மறித்து 'சைக்கிளிங்' விடுவதால் ஒரு பாதையிலேயே வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, உதவி கமிஷனர்கள் ரியாசுதீன், ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
'சைக்கிளிங்' செய்ய தடை விதிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
சைக்கிளிங் செய்ய தடை
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் 'சைக்கிளிங்' செய்து வருவதால் இரு வழி சாலையை ஒரு வழி சாலையாக மாற்றி விடப்படுகிறது. அதேபோல் போலீஸ் துறை சார்பாக இருவழி சாலை, ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டிருந்தது.
இன்று(அதாவது நேற்று) 'சைக்கிளிங்' நடக்காத நிலையில் வாகனங்கள் குறைவாக இருந்ததால் ஒரு வழி சாலையாக மாற்றியதை அறியாமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 'சைக்கிளிங்' காரணமாக அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடக்கிறது. எனவே கிழக்கு கடற்கரை சாலையில் உடனடியாக 'சைக்கிளிங்' நடப்பதை தடை செய்ய வேண்டும். அதையும் மீறி நடந்தால் மீண்டும் சாலை மறியல் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.