சென்னை
கோயம்பேட்டில் 'ஸ்கூட்டி' தீப்பிடித்து எரிந்து இளம்பெண் படுகாயம் - பாட்டிலில் இருந்த பெட்ரோலுடன், செல்போனையும் சேர்த்து வைத்ததால் விபரீதம்
|பெட்ரோல் பாட்டிலுடன் செல்போனையும் சேர்த்து வைத்து இருந்ததால் திடீரென செல்போனில் அழைப்பு வந்தபோது ‘ஸ்கூட்டி’ தீப்பிடித்து எரிந்தது. இதில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னை வியாசர்பாடி, சஞ்சய் நகர், ஏரிக்கரையை சேர்ந்தவர் ரோகிணி (வயது 25). இவர், மதுரவாயல் வி.ஜி.பி. அமுதம் நகரில் உள்ள தனியார் சமையல் எண்ணெய் கம்பெனியில் பகுதி வினியோகஸ்தராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் தனது 'ஸ்கூட்டி' வாகனத்தில் கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் உள்ள மளிகை கடைக்கு ஆர்டர் எடுப்பதற்காக வந்தார். பின்னர் பணியை முடித்து விட்டு ரோகிணி தனது 'ஸ்கூட்டியை' 'ஸ்டார்ட்' செய்தார்.
அப்போது திடீரென 'ஸ்கூட்டி' குப்பென தீப்பிடித்து எரிந்தது. ரோகிணி அணிந்திருந்த ஆடையிலும் தீப்பிடித்து எரிந்தது. அவர் சற்று உடல் பருமனாக இருந்ததால் அவரால் உடனடியாக 'ஸ்கூட்டி' வாகனத்தில் இருந்து இறங்க முடியவில்லை. அதற்குள் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். 'ஸ்கூட்டி'யில் எரிந்த தீயும் அணைக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ரோகிணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ரோகிணி, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி அதனை 'ஸ்கூட்டி'யின் முன்புறம் உள்ள சிறிய பெட்டியில் வைத்திருந்தார். அதனுடன் தனது செல்போனையும் சேர்த்து வைத்துள்ளார்.
அப்போது அவரது செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதில் கசிந்து இருந்த பெட்ரோலில் தீப்பிடித்து எரிந்ததுடன், தீயில் பெட்ரோல் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலும் இளகி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் ரோகிணி உடலிலும், 'ஸ்கூட்டி' வாகனம் முழுவதும் பெட்ரோல் பட்டதுடன், ஏற்கனவே அவரது 'ஸ்கூட்டி'யில் எண்ணெய் படிந்து இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. ரோகிணியால் உடனடியாக கீழே இறங்க முடியாததால் அவரது உடல் முழுவதும் தீ பரவியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.