< Back
மாநில செய்திகள்
அம்பத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளம்பெண் பலி - ஹெல்மெட்டை சரியாக அணியாததால் தனியாக பறந்தது
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளம்பெண் பலி - ஹெல்மெட்டை சரியாக அணியாததால் தனியாக பறந்தது

தினத்தந்தி
|
2 Dec 2022 2:46 PM IST

அம்பத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இளம்பெண் பலியானார். ஹெல்மெட்டை சரியாக அணியாததால் தனியாக கழன்று விழுந்தது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலின் (வயது 26). இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் ஏஞ்சலின் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த கார், இவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஏஞ்சலின் தலையில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இருசக்கர வாகனத்தில் வந்த ஏஞ்சலின் ஹெல்மெட்டை சரியாக அணியவில்லை என தெரிகிறது. இதனால் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டபோது ஏஞ்சலின் தலையில் இருந்த ஹெல்மெட் தனியாக கழன்று பறந்துள்ளது. இதனால் அவரது தலையில் படுகாயம் அடைந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூரை சேர்ந்த கார் டிரைவர் சரத்குமார் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்