கன்னியாகுமரி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|தக்கலை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக தந்தை போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தக்கலை:
தக்கலை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக தந்தை போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பட்டதாரி இளம்பெண்
தக்கலை அருகே உள்ள பனவிளை, சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சுனில்ராஜ் (வயது35) டெம்போ டிரைவர். இவரது மனைவி அஜிதா (26) பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
செல்வின் சுனில்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சொந்தஊர் வந்த அவர் டெம்போ ஓட்டி வருகிறார்.
இந்தநிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினார்
நேற்று முன்தினம் இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலையில் வெளியே சென்ற செல்வின் சுனில்ராஜ் 8 மணியளவில் மனைவியை செல்போனில் அழைத்தார். அப்போது அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் அஜிதா தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் அஜிதாவை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அஜிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகியுள்ளதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலர்மேல்மங்கையும் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே அஜிதாவின் தந்தை பால்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அஜிதாவிடம் அவரது கணவர் செல்வின் சுனில் ராஜ், மாமியார் சுசீலா (58) ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 ஆண்டுகளில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.