திருவண்ணாமலை
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம்
|சு.பாப்பம்பாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
திருவண்ணாமலை அருகில் உள்ள சு.பாப்பம்பாடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை முன்னேற்றக்குழு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய அரசு திட்டங்கள்) எஸ்.ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காரீப் பருவத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும், மண்மாதிரி, விதை நேர்த்தி, விதைப்பு மற்றும் நடவு பற்றி விளக்கமாக பேசினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இயற்கை உரங்கள் தயாரிப்பது, அதன் பயன்கள் மற்றும் மகசூல் பெறுவது பற்றியும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் மண்மாதிரி சேகரிப்பு மற்றும் உழவன் செயலி பற்றியும், உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியநாராயணன் நுண்ணூட்ட உரம் இடுவது அதன் பயன்கள் மற்றும் மகசூல் பற்றியும், தோட்டக்கலை உதவி அலுவலர் சுரேஷ்குமார் தோட்டக்கலை துறையில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், 2023-24-ம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் தற்போது உள்ள இடுபொருள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி கூறினார்.
இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார்.