சென்னை
வேளச்சேரியில் காதலியை திருமணம் செய்த என்ஜினீயரை கடத்திய இளம்பெண்
|முதல் காதலியை திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரை காரில் கடத்திய 2-வது காதலி கட்டாய தாலி கட்டிக்கொண்ட சம்பவம் வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்ஜினீயர் கடத்தல்
சென்னை வேளச்சேரி அண்ணாநகர் 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பார்த்திபன் (வயது 31). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கிண்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (31). இவர்களுடன் பார்த்திபனின் தாயார் ஆஷாபிந்து (48) வசித்து வருகிறார்.
பார்த்திபன் வழக்கம்போல் அலுவலகம் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார். இதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே அவர் வந்தார். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் காரில் வந்தார். அவருடன் மேலும் ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் வந்தனர். திடீரென அவர்கள் 4 பேரும் சேர்ந்து பார்த்திபனை வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
காஞ்சீபுரத்தில் மீட்பு
பார்த்திபனின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஆஷாபிந்து ஓடிவந்து காரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இது தொடர்பாக பார்த்திபனின் மனைவி பிரியா, வேளச்சேரி போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் பார்த்திபனின் செல்போன் சிக்னலை வைத்து காஞ்சீபுரம் அருகே அவரை பத்திரமாக மீட்டனர். காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரையும் வேளச்சேரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்னாள் காதலி
காரில் பார்த்திபனை கடத்தி சென்றது அவருடைய முன்னாள் 2-வது காதலியான ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா (27) என தெரியவந்தது. அவருடன் வந்தது தாயார் உமா (50), தாய்மாமன் மகன் ரமேஷ் (39), காஞ்சீபுரத்தை சேர்ந்த சித்தப்பா சிவகுமார் (48) என்பதும் தெரிந்தது.
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னுடன் கல்லூரியில் படித்த பிரியாவை முதலில் பார்த்திபன் காதலித்து உள்ளார். பின்னர் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன்பிறகு 2016-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பார்த்திபன் சவுந்தர்யாவை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு பிப்ரவரி மாதம் முதல் பிரித்துவிட்டனர்.
கட்டாய தாலி
இந்த நிலையில் மீண்டும் பழைய காதலியான பிரியாவை பார்த்திபன் சந்தித்தபோது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 5-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்திபனின் 2-வது முன்னாள் காதலியான சவுந்தர்யா, தனது தாய் மற்றும் உறவினர்களுடன் காரில் வந்து பார்த்திபனை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக தாலி கட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த விவாகரத்தில் 2 தரப்பிலும் சமாதானமாக செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். எனினும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.