பெரம்பலூர்
பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
|பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குழு விளையாட்டு போட்டிகள்
பாரதியார் தினம், குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து, ஹேண்ட் பால், கோ-கோ, ஆக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறுவட்ட அளவில் நடத்தப்பட்ட மேற்கண்ட குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின.
அரசு பள்ளிகள் சாதனை
ஹேண்ட் பால் போட்டியில் 14, 17, 19 வயது பிரிவுகளில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் அணிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதேபோல் கூடை பந்து போட்டி, டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் 14, 17, 19 வயது பிரிவுகளில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தது. எறிபந்து போட்டியில் 14, 17, 19 வயது பிரிவுகளில் அயன்பேரையூர் லெப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தது.
கோ-கோ போட்டியில் 14, 17 வயது பிரிவுகளில் சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அணிகளும், 19 வயது பிரிவில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடம் பிடித்தது. ஆக்கி போட்டியில் 14, 17 வயது பிரிவுகளில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகளும், 19 வயது பிரிவில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
பாராட்டு சான்றிதழ்
இதையடுத்து, போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.