கடலூர்
விருத்தாசலம், வடலூரில் ஆசிரியர்கள் போராட்டம்
|சென்னையில் ஆசிரியர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து விருத்தாசலம், வடலூரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், முழு நேர ஆசிரியர் பணி மற்றும் பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், போட்டித் தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கோரி 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் கடந்த மாதம் இறுதியில் இருந்து ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 1600 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக நேற்று பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, விருத்தாசலம் சரகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி விருத்தாலம் வடவாடியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் சென்னயைில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியர் பிரான்சிஸ் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர்
இதேபோன்று, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) பேரமைப்பு சார்பில் வடலூரில் மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிறுவனம் வாயில் முன்பு அனைத்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட உயர்மட்ட குழுவின் உறுப்பினர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆசிரியர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதில் வடலூர் கல்வி மாவட்ட தலைவர் கனகராஜ், வட்டார பொறுப்பாளர்கள் சரவணன், வசந்தி, திருக்குமார், சுந்தர்ராஜன், செல்வகுமார், டேவிட் செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி செல்வி, கல்வி மாவட்ட செயலாளர் அமுதா, வட்டாரத்தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில் சகாய ஞானசேகர் நன்றி கூறினார்.