சென்னையில் வலுக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: உண்ணாவிரதத்தில் 30 பேர் மயக்கம்
|சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. உண்ணாவிரதத்தில் 30 பேர் மயக்கம் அடைந்தனர். பேரணி சென்ற ஆசிரியர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில், 'அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதே இடத்தில் ''டெட்'' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்த கூடாது' என்பதை வலியுறுத்தி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும், 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.
உண்ணாவிரதம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட வடிவத்தை காலவரையற்ற உண்ணவிரதமாக நேற்று முன்தினம் மாற்றினார்கள். மேலும் மற்ற ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். இரவு யாரும் கலைந்து செல்லவில்லை. சோர்வடைந்த 9 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 21 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மயக்கம் அடைந்தவர்களில் 27 பேர் ஆசிரியைகள் ஆவார்கள். தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் அறிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேரணியால் பரபரப்பு
இந்த போராட்ட பரபரப்புக்கு மத்தியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், 1.6.2009-ம் ஆண்டுக்கு பின்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே எல்.ஜி. சாலை சந்திப்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மணிமேகலை, பொதுச்செயலாளர் மயில் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை சி.ஐ.டியூ. மாநில தலைவர் சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகம் வரை இந்த பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே முடிவடைந்தது. பின்னர், ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆசிரியர்கள் பேரணி சென்ற சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை அலுவலகம் வந்தவர்கள் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டது.