தஞ்சாவூர்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளையராஜா, அமைப்பு செயலாளர் தமிழ்மாறன், மகளிர் அணி செயலாளர் வேதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும். பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில செயலாளர் ராஜா, தஞ்சை கல்வி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.