< Back
மாநில செய்திகள்
மன்னித்து விடுங்கள்; ஒரு மாதத்தில் தந்துவிடுகிறேன்... கொள்ளை அடித்துவிட்டு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்
மாநில செய்திகள்

மன்னித்து விடுங்கள்; ஒரு மாதத்தில் தந்துவிடுகிறேன்... கொள்ளை அடித்துவிட்டு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்

தினத்தந்தி
|
3 July 2024 10:57 AM IST

மெஞ்ஞானபுரத்தில் ஆசிரியர் வீட்டில் திருடிய நகை, பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின், ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சித்திரை செல்வின் தனது மனைவியுடன் கடந்த 17-ந் தேதி சென்னை சென்றுவிட்டார். அப்போது இவரது வீட்டை அந்த பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் பராமரித்து வந்தார்.

கடந்த 26-ந் தேதி செல்வி வழக்கம்போல, ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணி செய்ய வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து செல்வி, சென்னையில் உள்ள சித்திரை செல்வினுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊருக்கு திரும்பி வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 1½ பவுன் தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் சித்திரை செல்வின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன், எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்" என்று எழுதப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி அதில் பதிந்து இருந்த கைரேகையை பதிவு செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்