அரியலூர்
பள்ளிகளில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
|அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
ரோஜா பூ கொடுத்து வாழ்த்து
ஒரு நல்ல ஆசிரியராக வாழ்ந்து, ஜனாதிபதி பதவி வரை உயர்ந்து மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, மாணவ-மாணவிகள் தங்களது ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாணவ-மாணவிகளிடம் இருந்து உற்சாகமாகவும், புன்சிரிப்புடனும் ஆசிரியர்கள் ரோஜா பூவை வாங்கியதை காண முடிந்தது.
மரியாதை
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகள் பாடம் நடத்த வந்த ஆசிரியர்களை வரவேற்று, அவர்களுக்கு இனிப்பு கொடுத்தனர். ஆசிரியர்களை கேக் வெட்ட வைத்து, பின்னர் அவர்களுக்கு மாணவ-மாணவிகள் கேக்கினை ஊட்டி மகிழ்ந்தனர். கரும்பலகையில் ஆசிரியர்களை வாழ்த்தி கவிதை எழுதியிருந்தனர்.
மேலும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் தினத்தையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.