திண்டுக்கல்
பள்ளிகளில் ஆசிரியர் தின விழா
|திண்டுக்கல்லில் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தின விழா நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்களை நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை வணங்கி, ஆசி பெற்றனர். ஒருசில பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மலர்களை தூவி மாணவர்கள் வரவேற்று, வாழ்த்துகளை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் தனித்தனியாக ஆசிரியர்களுக்கு பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து, தாங்களும் வாழ்த்து பெற்றனர்.
இதேபோல் மாணவ-மாணவிகள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களை புகழ்ந்து கவிதை எழுதி வந்து வாசித்தனர். மேலும் ஆசிரியரை ஓவியமாக வரைந்தும் பரிசளித்தனர். சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நடனம், விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர் தினத்தின் சிறப்புகள், ஆசிரியர் பணியின் பெருமைகள் குறித்து மாணவர்கள் பேசி அசத்தினர். இதனால் ஆசிரியர் தின கொண்டாட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.