< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூர் அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்கள்
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூர் அரசு பள்ளியில் 'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்கள்

தினத்தந்தி
|
24 Jun 2023 1:13 PM IST

திருவொற்றியூர் அரசு பள்ளியில் ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த 100 மாணவர்களின் தலைமுடியை ஆசிரியர்கள் வெட்டி முடித்திருத்தம் செய்தனர்.

திருவொற்றியூர் விம்கோ நகரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1,350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கோடை விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்டது. விடுமுறையின்போது 'ஸ்டைலாக' தலைமுடி வெட்டி இருந்த மாணவர்கள் பலர் அப்படியே பள்ளிக்கு வந்து இருந்தனர். 'புள்ளிங்கோ ஸ்டைல்', 'டபுள் சைடு' கோடு, 'பாக்சர்', 'மஸ்ரூம் கட்டிங்', 'லைன் கட்டிங்', 'டாப் கட்டிங்' உள்ளிட்ட விதவிதமான 'ஸ்டைலில்' அலங்கோலமான தலைமுடியுடன் மாணவர்கள் வந்தனர்.

இதனை கவனித்த ஆசிரியர்கள், 'புள்ளிங்கோ' போல் விதவிதமாக தலைமுடியுடன் வந்த மாணவர்களை அழைத்து சரியான முறையில் முடித்திருத்தம் செய்து வரும்படி கூறினர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் பலர் வித்தியாசமான தலைமுடியுடன் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 'புள்ளிங்கோ' ஸ்டைலில் தலைமுடியுடன் வந்த சுமார் 100 மாணவர்களை தலைமை ஆசிரியர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் கொத்தாக பிடித்தனர். இதில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் மட்டும் 62 பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் பள்ளி வளாகத்திலேயே மரத்தடியில் அமரவைத்து தலைமுடியை ஒழுங்கான முறையில் நறுக்கினர். இதற்காக பள்ளி கல்விக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம். முயற்சியில் 5-க்கும் மேற்பட்ட முடித்திருத்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது 'ஸ்டைலாக' இருந்த தலைமுடியை வெட்டுவதை பார்த்ததும் சில மாணவர்கள் மனவேதனை அடைந்து ஆசிரியர்களிடம் கெஞ்சினர். ஆனால் அலங்கோலமாக வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடித்திருத்தம் செய்யப்பட்டது. முடித்திருத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களின் அலங்கோலமான தலைமுடியை வெட்டினர்.

பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் தலைமுடி ஒழுக்கம் குறித்து ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பினர். இதனால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்