< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது
சென்னை
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
13 Aug 2022 2:21 PM IST

கல்பாக்கத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் புரட்சிமாறன் என்கிற மணிமாறன் (வயது 45). இவர் அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்

பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் அவர் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களை சமாதானம் செய்து உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

3 மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, பாலியல் தொல்லை கொடுத்ததாக மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மணிமாறன் தற்போது லத்தூர் ஒன்றிய விடுதலை சிறத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். மணிமாறனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்