சென்னை
வாலிபரை தாக்கி வெந்நீரை ஊற்றிய ஆசிரியை-கணவர் கைது
|குரோம்பேட்டை,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 24). பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிகண்டன்(30). இவருடைய மனைவி ராஜி என்ற ராஜேஸ்வரி (28). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மணிகண்டன் வீட்டு வாசலில் மதுபாட்டில்கள் கிடந்தது. இதனை கண்ட மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் அர்ஜூன்தான் குடித்து மதுபாட்டில்களை வீசி இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். இதுபற்றி அர்ஜூனிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கட்டை மற்றும் அங்கிருந்த மது பாட்டில்களால் அர்ஜூனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அர்ஜூன் மயங்கி விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கொதிக்கும் வெந்நீரை எடுத்து வந்து அர்ஜூன் மீது ஊற்றியதாக தெரிகிறது.
இதில் மேலும் படுகாயம் அடைந்த அர்ஜூன், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவருடைய மனைவி ராஜேஸ்வரி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.