அரியலூர்
ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு தொடக்கம்
|ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு தொடங்கியது.
5 இடங்களில்...
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான கணினி வழி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன், ஸ்ரீராமகிருஷ்ணா, ரோவர் ஆகிய 3 பொறியியல் கல்லூரிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அண்ணா பல்கலைக்கழகம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி ஆகிய 2 இடங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 560 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 280 பேரும் விண்ணப்பித்திருந்தனர். காலையில் 9 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை நடந்தது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.
320 பேர் வரவில்லை
காலையில் நடந்த தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 171 பேர் எழுதினர். 109 பேர் வரவில்லை. மாலையில் நடந்த தேர்வை 194 பேர் எழுதினர். 86 பேர் வரவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலையில் நடந்த தேர்வை 79 பேர் எழுதினர். 61 பேர் வரவில்லை. மாலையில் நடந்த தேர்வை 76 பேர் எழுதினர். 64 பேர் வரவில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேர்வை முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனும், அரியலூர் மாவட்டத்தில் நடந்த தேர்வை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பலத்த சோதனை
முன்னதாக தேர்வு மையங்களுக்கு காலையில் தேர்வு எழுத வந்தவர்கள் 8.30 மணி வரையிலும், மதியம் தேர்வு எழுத வந்தவர்கள் 1.30 மணி வரையிலும் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுத வந்திருந்தவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே, அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களுக்குள் அனுமதி அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றை மட்டும் கொண்டு செல்ல தேர்வாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று தொடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 14-ந் தேதி வரை காலை, மதியம் ஆகிய 2 வேளைகளில் நடக்கிறது. வருகிற 9-ந் தேதி தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.