< Back
மாநில செய்திகள்
பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியை சாவு
திருச்சி
மாநில செய்திகள்

பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியை சாவு

தினத்தந்தி
|
22 Sept 2023 2:23 AM IST

பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழந்தார்.

கல்லக்குடி:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52). இவர் புள்ளம்பாடி அருகே கல்லக்குடி ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்று வருகிறது.புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இணையதள இணைப்பு சரியாக கிடைக்காத காரணத்தால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஆசிரியை அன்னாள் ஜெயமேரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை நேற்று நடத்தியுள்ளார். அப்போது சரியான இணைப்பு கிடைக்காத காரணத்தால், அது பற்றி அருகில் இருந்த ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அது பற்றி கூறினர்.இதையடுத்து அருகில் உள்ள ஆசிரியர்கள் ஓடி வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து, அவரை புள்ளம்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் இணையதள இணைப்பு சரியாக கிடைக்காததால், ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆன்லைன் தேர்வுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்