சென்னை
கணவர் கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி
|மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீேழ விழுந்த பள்ளி ஆசிரியை தனது கணவர் கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
பள்ளி ஆசிரியை
அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 49). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை விஜயலட்சுமி, தனது கணவர் ஆறுமுகத்துடன் மோட்டார் சைக்கிளில் வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு-வானகரம் பிரதான சாலையில் வரும்போது எதிரே வந்த லாரி இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
லாரி சக்கரத்தில் சிக்கி பலி
இதில் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த ஆசிரியை விஜயலட்சுமி, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் விஜயலட்சுமி, கணவர் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலியான விஜயலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.