சென்னை
5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
|கொரட்டூர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை கொரட்டூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.
அயனாவரம் செட்டி தெருவைச் சேர்ந்த பழனிவேல் (வயது 56) என்பவர் இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்தார். அப்போது வகுப்பறையில் மாணவிகளை தனது மடியில் அமர வைத்தும், தொடக்கூடாத இடங்களில் தொட்டும் பாலியல் ரீதி யாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, இது தொடர்பாக அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், "5-ம் வகுப்பு ஆசிரியர் பழனிவேல், எனது மகளை மடியில் அமர வைத்து கன்னத்தில் முத்தமிட்டதுடன், தொடக்கூடாத இடத்தில் தொடுவது போன்ற செயல்களை செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆசிரியர் பழனிவேல், 5-ம் வகுப்பில் படிக்கும் மேலும் சில மாணவிகளிடமும் இதுபோல் பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர் பழனிவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.