< Back
மாநில செய்திகள்
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.70¾ லட்சம் மோசடி
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.70¾ லட்சம் மோசடி - ஆசிரியை கைது

தினத்தந்தி
|
26 May 2024 10:28 AM IST

திருவண்ணாமலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.70¾ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உண்ணாமலை. இவர் இசுக்கழி காட்டேரி அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரிையயாக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்து உள்ளனர். அதேபகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு உண்ணாமலையிடம் ரூ.1 லட்சத்திற்கான ஏலச்சீட்டில் இணைந்து கடந்த ஜனவரி மாதம் வரை 13 தவணைகளாக ரூ.46 ஆயிரத்து 125 கட்டியுள்ளார்.

அதேபோல் மணிவண்ணன் அவரது மகன் பெயரில் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டிற்கு 13 தவணையாக ரூ.46 ஆயிரத்து 125 கட்டியுள்ளார்.

மேலும் அவர் ரூ.2 லட்சத்திற்கான சீட்டிற்காக தலா 6 தவணை தொகை கட்டியுள்ளார். ஆக மொத்தம் மணிவண்ணன் ஏலச் சீட்டுகளுக்காக ரூ.1 லட்சத்து 78 ஆயித்து 750-ஐ உண்ணாமலையிடம் ரொக்கமாக கொடுத்து உள்ளார். அதன் பின்னர் உண்ணாமலையும், அவரது கணவர் செல்வமும் மணிவண்ணனிடம் தொடர்பு கொண்டு தாங்கள் பல தொழில் செய்து வருவதால் எங்களுக்கு பணம் அதிகமாக தேவைப்படுகிறது.

எனவே உடனடியாக ரூ.8 லட்சத்தை கொடுத்தால் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதையடுத்து மணிவண்ணன் அவர்கள் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.5 லட்சத்தை ரொக்கமாக உண்ணாமலையிடம் கொடுத்து உள்ளார். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் செல்வத்தின் வங்கி கணத்தில் ஒரு முறை ரூ.1 லட்சமும், மறுமுறை ரூ.60 ஆயிரமும் செலுத்தி உள்ளார். மேலும் டிசம்பர் மாதத்தில் உண்ணாமலையிடம் மீண்டும் ரூ.1 லட்சம் கொடுத்து உள்ளார். ஆக மொத்தம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்தை மணிவண்ணன் அவர்களிடம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் உண்ணாமலை சீட்டை திடீரென்று பாதியில் நிறுத்தி விட்டு தலைமறைவானார். இதையடுத்து மணிவண்ணன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதேபோல் இவர்களால் பாதிக்கப்பட்ட பலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்ணாமலையும், அவரது கணவர் செல்வமும் இணைந்து அதே கிராமத்தை சேர்ந்த 20 பேரிடம் ஏலச்சீட்டில் ரூ.8 லட்சத்து 58 ஆயிரத்து 410-ம், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பெற்ற தொகை ரூ.62 லட்சத்து 30 ஆயிரமும் என மொத்தம் ரூ.70 லட்சத்து 88 ஆயிரத்து 410 மோசடி செய்து தெரியவந்தது. இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட உண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் செல்வத்தை தேடி வருகின்றனர். செல்வம் ராணுவத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்