அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியர் கைது
|அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் இரணியலில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் கடந்த வாரம் குழந்தைகள் நல உதவி மையத்தின் 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஒரு புகார் கூறினர்.
அதில், கணக்குப்பதிவியல் ஆசிரியரான கிறிஸ்துதாஸ் வகுப்பில் பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் செக்ஸ் பாடம் நடத்தியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பள்ளியின் முன்பு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், 2 மாணவிகளும் பெற்றோர்களுடன் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைதொடர்ந்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் கைது
இதற்கிடையே புகார் அளித்து 10 நாட்களாகியும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்றுமுன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், அந்த மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க குளச்சல் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் குளச்சல் மகளிர் போலீசார் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
இன்னொரு ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ஸ்டீபன் அந்தோணி ராஜ் (வயது34). இவர் அந்த பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன் அந்தோணி ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தலைமை ஆசிரியர்
தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (56). இவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10 வயதான ஒரு பள்ளி மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை நேற்று கைது செய்தனர்.