மாற்றுத்திறனாளி மாணவர்களை வைத்து பள்ளி கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியர் கைது
|பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ததுடன், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில், ஒரு கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் அறிவுசார் குறைவுடையோர் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 வயது முதல் 60 வயது வரை உள்ள 104 மாற்றுத்திறனாளிகள் தங்கி உள்ளனர்.
இதில் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அங்கேயே கல்வி கற்று வருகிறார்கள். இந்த&நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள், பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி நேற்று காலை சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் மாணவர்கள் அணிந்து இருந்த ஆடைகளை வைத்து அதிகாரிகள் பள்ளியை அடையாளம் கண்டனர்.
அதிகாரிகள் விசாரணை
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வைரலான வீடியோவை அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் இமானுவேல் தனது செல்போனில் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. அந்த ஆசிரியரிடம் திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் கைது
பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக மாற்றுத்திறனாளி மாணவர்களை கொண்டு ஆசிரியர் சுத்தம் செய்ய வற்புறுத்தினார்? அதனை அவரே எதற்கு வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்? என்பது குறித்து போலீசார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் முடிவில் ஆசிரியர் இமானுவேலை போலீசார் கைது செய்தனர்.