நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்டத் தொழிலாளி பலி - மக்கள் அச்சம்
|நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீநாதன் (வயது 54). இவர் கூடலூரில் உள்ள காமராஜ் நகரில் காபி தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீநாதன் தனது தோட்டத்திற்கு வந்தார். சிறிது நேரத்தில் காபி தோட்டத்துக்குள் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியது. அப்போது காட்டு யானையின் பிளிறல் சத்தமும், ஸ்ரீநாதனின் அலறல் சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது ஸ்ரீநாதன் யானை தாக்கியதில் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அருகில் காட்டு யானை நிற்பதை கண்டனர். பின்னர் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வருவாய், வனத்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயன்றனர். உடலை எடுக்க விடாமல் மறியல் ஆனால் உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கூடலூர்- பார்வுட் சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி தேயிலைத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடலூர் வனக் கோட்டம், ஓவேலி வனச் சரகத்தில் மனித-விலங்குகளின் மோதல்களை குறைப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டிலிருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கூடுதல் களப்பணியாளர்கள் சுமார் 50 பேர் பாதுகாப்புப் பணியிலும் 3 வாகனங்களுடன் அதிவிரைவு நடவடிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபடுட்டுள்ளனர்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க ஆளில்லா விமானக் குழுக்களை அனுப்புதல், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவுதல், காட்டு யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழையாத வகையில் புகை மற்றும் நெருப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.