தேனி
நகராட்சிக்கு வரி பாக்கி: 95 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
|தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாததால் 95 வீடுகளுக்கு குடிநீர் இணை்பபு துண்டிக்கப்பட்டது.
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 95 வீடுகளுக்கு நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று குடிநீர் இணைப்பை துண்டித்தனர். அதுபோல் தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்த 4 கடைகளுக்கும் நேற்று சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளுக்கு ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 560 வாடகை நிலுவை உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கான குடிநீர் வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி மற்றும் காலிமனை வரி போன்றவற்றை நிலுவையின்றி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.