திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.9¼ லட்சம் வரி வசூல்
|நெல்லை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.9¼ லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.
நெல்லை மாநகராட்சி சார்பில் மேலப்பாளையம், தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் நெல்லை டவுன் மண்டலத்தில் நேற்று சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற்றது. பேட்டை 22-வது வார்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் முகாம்கள் உதவி ஆணையாளர் காளிமுத்து தலைமையிலும், வண்ணார்பேட்டையில் உதவி ஆணையாளர் கிறிஸ்டி தலைமையிலும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் புதிய சொத்து வரி விதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, இரட்டை வரி விதிப்பு நீக்கம், காலிமனை வரி விதிப்பு பிரச்சினை போன்ற கோரிக்கைகளுடன் 64 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீர்வு காண ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் மொத்தம் ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 156 வரி வசூல் ஆனது. இதில் நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, உதவி ஆணையாளர்கள் காளிமுத்து, கிறிஸ்டி, வெங்கட்ராமன் மற்றும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.