சிவகங்கை
வரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை வதைக்கிறது
|வரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை வதைக்கிறது என்று எம்.எல்.ஏ. கூறினார்.
காரைக்குடி,
காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசு விதித்துள்ள அத்தியா வசிய பொருள்களுக்கான புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார். அப்போது அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய மக்கள் கொரோனா பேரிடர் காலத்தை வலியோடு தாங்கி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலைகளை உயர்த்தியது. தற்போது அதற்கும் ஒருபடி மேலேபோய் அரிசி, பருப்பு, எண்ணெய், பால், தயிர், மோர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி வரிவிதிக்கப்பட்டு உள்ளது. பெருமுதலாளிகளுக்கு மானியம், வரிச்சலுகை அளித்து ஏழை எளிய மக்களின் மீது தாங்க முடியாத வரிகளை விதித்து வருகிறது.
2004-2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்திலும் விலைவாசியை கட்டுக்குள் நிறுத்தி பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்து இந்திய மக்களின் நலனை பாதுகாத்தார்கள்.
ஆனால் தற்போதைய மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ளது. வரிகள் மக்களின் வாழ்வாதாரத்தை வதைக்கும். விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், முன்னாள் நகரத்தலைவர் சிவானந்தம், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி இமய மடோனா, காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் ரெத்தினம், அமுதா, வட்டார தலைவர்கள் இருதயராஜ், ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு மத்தியரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.