சிவகங்கை
திடக்கழிவு பயன்பாட்டு வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்
|கடைகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் திடக்கழிவு பயன்பாட்டு வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று நகர சபை கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகங்கை,
கடைகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் திடக்கழிவு பயன்பாட்டு வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று நகராட்சிகூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நகராட்சி கூட்டம்
சிவகங்கை நகராட்சி கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர சபை ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, துணைத்தலைவர் கார் கண்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-அன்புமணி: நகரில் சாக்கடைகளில் சுத்தப்படுத்தும்போது அங்கு இருந்து அள்ளிய மணலை அப்படியே போட்டு விடுகின்றனர். எனவே உடனடியாக அதை அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு வீட்டில் குடிதண்ணீர் வரவில்லை என்று மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வரி
தலைவர் துரை ஆனந்த்: ஏற்கனவே கடந்த கூட்டத்திலேயே குடி தண்ணீர் பிரச்சினை வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாக்கடைகளை சுத்தப் படுத்தும் போது உடனுக்குடன் மண்ணை அல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
வீனஸ் ராமநாதன்: எனது வார்டில் சாக்கடை மண்ணை அள்ளி வெளியில் போட்டுள்ளனர். கடந்த 2 மாதமாக அதை அள்ளாமல் அப்படியே கிடக்கிறது. ராஜபாண்டி:நகரிலுள்ள வியாபாரிகளுக்கு திடக்கழிவு மேம்பாட்டு வரி என்று அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது.
நோட்டீஸ்
தலைவர்:-இந்த வரி 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தது முன்தேதியிட்டு வசூலிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. பிரியங்கா: சிவகங்கை நகராட்சியில் கடைகளுக்கான வரி நிர்ணயம் செய்து வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வரியோடு திடக்கழிவு பயன்பாட்டு வரி என அதிகபட்சமாக வரி போடப்பட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த வரி விதிக்கப்படுகிறது. ஒரு கடைக்கு 6 மாத வரியாக ரூ.279 வசூலிக்கப்படுகிறது. ஆனால் திடக் கழிவு பயன்பாட்டு வரி என ரூ. 1,352 வசூலிக்கின்றனர். மேலும் இந்த வரியை கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுஉள்ளது.
வர்த்தகர் களையும் மக்களையும் பாதிக்கும் திடக்கழிவு பயன்பாட்டு வரியை ரத்து செய்ய வேண்டும்.பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கு கூட பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புஷ்பம்: எனது 12-வது வார்டில் வாரத்திற்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. மேலும் தண்ணீர் விடும் நேரமும் தெரிவதில்லை.
தலைவர்: நகராட்சி பணியாளர்களிடம் கடந்த கூட்டத்திலேயே இந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உ ள்ளது. எனவே இன்னும் இரண்டு நாளில் அதை சரி செய்யும் படி தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
என்.எம்.ராஜா: மக்கள் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைகளை செய்ய வேண்டும் எனது வாழ்வில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
தலைவர்: சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளிலும் ரூ. 25 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்க அரசுக்கு அனுப்பப் பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்செல்வி: தெருக்களில் குப்பைகளை வாங்கும் தூய்மை பணியாளர் விடுமுறையில் சென்றால் அவருக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்க வேண்டும். தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் துணைத் தலைவர் கார் கண்ணன் நன்றி கூறினார்.