நண்பரின் மகள் காதலை கண்டித்த டாஸ்மாக் ஊழியர்: பெட்ரோல் குண்டு வீசிய காதலன்
|கடலூரில் டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 50). இவர் சிதம்பரத்தில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு சிலம்பரசன், தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் சிலம்பரசன் சென்னை எண்ணூர் பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். தனுஷ் கடலூர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு மோகன் தனது வீட்டில் படுத்து தூங்கியபோது, இரவு 12.30 மணி அளவில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டுக்கதவு மற்றும் ஜன்னலில் இருந்த திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி மோகன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நள்ளிரவில் 2 சிறுவர்கள் அந்த வழியாக சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் 2 சிறுவர்கள் நடமாடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து சந்தேகத்திற்குரிய 2 சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் என்பது தெரிந்தது. மேலும் கல்லூரி மாணவர், மோகனின் நண்பரின் 17 வயது மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த மோகன், அந்த சிறுமியை கண்டித்துள்ளார். இந்த விவரத்தை அந்த சிறுமி, கல்லூரி மாணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் சேர்ந்து மோகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி மாணவரையும், 16 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.