< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் மது பாட்டில்கள் விவகாரம் - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
மாநில செய்திகள்

டாஸ்மாக் மது பாட்டில்கள் விவகாரம் - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

தினத்தந்தி
|
10 Jun 2022 6:28 PM IST

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என கோட்டு தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது.

சென்னை,

வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மலை பகுதிகளில் விற்கப்படும் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது, மீதி தொகையை வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தது.

பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால், காட்டுத்தீ மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம் என்றும், தவறினால், மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றிற்கு 80 ஆயிரம் மதுபாட்டில்கள் திரும்பப்பெறப்படுகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்படியானால் இந்த திட்டத்தை ஏன் மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை முன்வைத்தனர். மேலும், மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கு, தற்போது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த கோர்ட்டு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கள் குறித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை கோர்ட்டு வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்