டாஸ்மாக் வாகன டெண்டர் விவகாரம்; அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை
|உண்மைக்கு புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்து செல்லும் போக்குவரத்து டெண்டர்கள், மண்டல ரீதியாக 43 டெண்டர்கள் கிட்டத்தட்ட 1,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் போடப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு உடனே இந்த டெண்டர்களை ரத்து செய்து முழுமையான இ-டெண்டர்களை போட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது;-
"மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது.
விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.