டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி கட்டாயம்
|டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1,484 இல் இருந்து 1,827 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும் எனவும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்கு 100% தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100 சதவீத தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரத்தினை அனுப்ப அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.