நாமக்கல்
பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலி
|பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலியானார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலியானார்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புல்லாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் வெப்படை அருகே சன்னியாசிபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பர்வதம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சன்னியாசிபட்டி டாஸ்மாக் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிபாளையம் அருகே பச்சாம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் பலியான ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.