< Back
மாநில செய்திகள்
பள்ளிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

தியாகதுருகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை மாணவிகளின் அச்சம் தீர இடமாற்றம் செய்யப்படுமா?

தியாகதுருகம்

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. குறிப்பாக தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள், திருக்கோவிலூர் சாலையில் உள்ள 1 டாஸ்மாக் கடை என மொத்தம் 3 டாஸ்மாக்கடைகள் மூடப்பட்டன. தற்போது தியாகதுருகம்-சேலம் மெயின்ரோட்டில் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.

ஆபாசமாக பேசுகிறார்கள்

இந்த டாஸ்மாக் கடையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி டாஸ்மாக் கடையை கடந்துதான் அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அப்போது டாஸ்மாக் கடையில் மது அருந்தும் மதுப்பிரியர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்வது, அதிக போதையால் சாலையோரமாக அலங்கோலமாக படுத்துக்கிடப்பது, ஆபாசமாக பேசுவது, சண்டை போடுவது போன்ற செயல்களை கண்டு மாணவிகள் அச்சப்படுகின்றனர்.

விபத்து அபாயம்

மேலும் மதுக்கடையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள முருகன் கோவிலுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் புக்குளம் பகுதியில் எந்நேரத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மதுபிாியர்கள் மது அருந்திவிட்டு அறைகுறை ஆடையுடன் சுற்றித்திரிவது, பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் மதுப்பிரியர்கள் போதையில் சாலையை கடக்க முயலும்போது அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

விதிமுறைகளை மீறி...

இப்படி பொதுமக்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து அவர்கள் கூறும்போது, அரசு பள்ளி மற்றும் கோவில்கள் 100 மீட்டருக்குள் இருந்தால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இங்கு குறிப்பிட்ட தொலைவுக்குள் கோவில் இருந்தும் அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஊருக்குத்தான் உபதேசமா? என்ற கேள்வி எழுகிறது. மதுபிரியர்களின் தொல்லையால் மாணவிகள் நிம்மதியாக பள்ளிக்கு சென்று வர முடியவில்லை. புக்குளம் பஸ் நிறுத்தத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் அவ்வப்போது எற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.

Related Tags :
மேலும் செய்திகள்