நாமக்கல்
மகாளய அமாவாசையையொட்டிமோகனூர், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்
|மகாளய அமாவாசையையொட்டி மோகனூர், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசை
தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு சென்று புனித நீராடி, பின்னர் பூஜை செய்து வழிபட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கை ஆகும். மகாளய அமாவாசையான நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்தனர். பின்னர் புனித நீராடி வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் பழம், பச்சரிசி, காய்கள், கீரைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வைத்து குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி மாவில் உருண்டை பிடித்து வைத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
தர்ப்பணம்
இதேபோல் பரமத்திவேலூரில் காசிக்கு நிகராக கருதப்படும் காசி விஸ்வநாதர் கோவில் எதிரே மயானம் இருப்பதால் புண்ணிய நதியாம் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நேற்று மகாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் பரமத்திவேலூரில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி பின்னர் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். முன்னதாக எல், பச்சரிசி மாவில் பிடிக்கப்பட்ட பிண்டங்களை இலையில் வைத்து புரோகிதர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காவிரியில் முன்னோர்கள் நினைத்து கரைத்தனர். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி சென்றனர்.
இதேபோல் நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு சென்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.