< Back
மாநில செய்திகள்
ரூ.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் மாத்திரைகள் வயிற்றில் வைத்து கடத்தல் - தான்சானியா நாட்டு பயணி கைது
மாநில செய்திகள்

ரூ.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் மாத்திரைகள் வயிற்றில் வைத்து கடத்தல் - தான்சானியா நாட்டு பயணி கைது

தினத்தந்தி
|
21 July 2022 4:55 PM IST

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி வந்த தான்சானியா நாட்டு பயணி கைது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து துபாய் பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாய் விமானத்தில் வந்த தான்சானியா நாட்டை சேர்ந்த ஜோசப் பாட்ரிக் (28) என்பவர் வந்தார். இவரது நடவடிக்கையை கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜோசப் பாட்ரிக்கை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது உகாண்டாவில் இருந்து துபாய் வழியாக சுற்றுலா பயணியாக வந்ததாக கூறினார். மேலும் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது வயிற்றில் ஏதோ மர்ம பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனே ஜோசப்பை ஸ்கேன் செய்தனர். அதில் வயிற்றில் அதிகமான மாத்திரைகள் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ஜோசப்பை அரசு மருத்துவமனையில் சேர்த்து இனிமா தந்து வயிற்றில் இருந்த கழிவுகளை வெளியேற்ற மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்தனர்.

வயிற்றில் வைத்து கடத்தி வந்த பொருள் வெளியேறியது. அப்போது 86 போதை பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதை விழுங்கி கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது. ரூ. 8 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 266 கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தான்சானியா நாட்டு வாலிபர் ஜோசப் பாட்ரிக்கை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது. இதன் பிண்ணனியில் யார் உள்ளனர் என விசாரணை நடந்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்