அரியலூர்
டேங்கர் லாரி வெடித்து டிரைவர் படுகாயம்
|டேங்கர் லாரி வெடித்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் மொத்தமாக சிமெண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இங்கு ஏராளமான டேங்கர் லாரிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு டேங்கர் லாரி சிமெண்டு லோடு ஏற்ற வந்துள்ளது. சிமெண்டு ஏற்றுவதற்கு முன்பு கடலூர் மாவட்டம் ஊத்தாங்கால் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜா என்பவர் டேங்கரை காற்றை நிரப்பி சுத்தம் செய்துள்ளார். அப்போது அதிகப்படியான காற்று நிரப்பப்பட்ட நிலையில் திடீரென லாரியில் பொருத்தப்பட்ட டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ராஜா படுகாயம் அடைந்தார். இதனைக்கண்ட ஆலை நிர்வாகத்தினர் அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.