வள்ளியூரில் டாரஸ் லாரி மீது டேங்கர் லாரி மோதல் - டிரைவர் பலி
|வள்ளியூரில் சாலையில் நின்ற டாரஸ் லாரி மீது பால் டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு.
வள்ளியூர்,
தர்மபுரியில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாலை திருவனந்தபுரத்திற்கு ஏற்றிக்கொண்டு அங்கிருந்து டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது.
இந்த டேங்கர் லாரியை ராஜபாளையத்தை சேர்ந்த ஜீவா(வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மாற்று டிரைவராக தர்மபுரியை சேர்ந்த மது (வயது 55) என்பவர் இருந்துள்ளார்.
டேங்கர் லாரி நெல்லை மாவட்டம் வள்ளியூர் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜல்லி கல் ஏற்றி சென்ற டாரஸ் லாரி பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் டேங்கர் லாரி டிரைவர் ஜீவா காயமடைந்தார். அருகிலிருந்த மாற்று டிரைவர் மது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வள்ளியூர் போலீசார் இறந்த மது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த டிரைவர் ஜீவாவை சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக பால் டேங்கர் லாரியில் இருந்து பால் கசிந்து ரோட்டில் கொட்டியது. உடனே மாற்று டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு பாலை அதில் மாற்றி கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.