< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

தினத்தந்தி
|
25 Oct 2023 12:36 AM IST

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

நண்பர்கள்

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கோட்டாத்தூரை சேர்ந்த சஞ்சீவி மகன் வினோத் (வயது 19). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22). இதில் வினோத், ராம் ஆகியோர் டிரைவராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 3 பேரும் கடந்த 22-ந் தேதி இரவு பெரம்பலூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கியாஸ் டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

3 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வினோத், ராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனந்த் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினோத், ராம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி டிரைவர் கைது

இதையடுத்து வினோத், ராம், ஆனந்த் ஆகியோரின் உடல்கள் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து கியாஸ் டேங்கர் லாரி டிரைவரான திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, அந்தரப்பட்டியை சேர்ந்த ராஜாவை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்