< Back
மாநில செய்திகள்
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கானவாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கானவாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தினத்தந்தி
|
12 March 2023 12:15 AM IST

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள்

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை பாட்லிங் பிளாண்டுகளுக்கு (சிலிண்டரில் நிரப்பும் இடம்) கொண்டு செல்வதே இந்த லாரிகளின் பிரதான பணியாகும். இந்த பணியில் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஒப்பந்தம் நீட்டிப்பு

இவை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் போடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 2018-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை தற்போதைய ஒப்பந்த காலம் ஆகும்.

இந்த நிலையில் ஆயில் நிறுவனங்கள் இந்த வாடகை ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

உறுதி செய்யப்படும்

இதுகுறித்து தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

எங்களது சங்கத்தின் சார்பில் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று ஆயில் நிறுவனம் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. வாடகையை பொறுத்த வரையில் டீசல் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்து தரப்படும்.

இது தொடர்பாக சங்க உறுப்பினர்களின் கருத்தை ஆயில் நிறுவனங்கள் கேட்டு உள்ளன. அதை வாங்கி அனுப்பினால், வாடகை ஒப்பந்த காலம் நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்