விருதுநகர்
3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம்
|டிசம்பர் இறுதிக்குள் புதிய திட்டத்தின் கீழ் தாமிரபரணி குடிநீர் 3 நகராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அருப்புக்கோட்டையில் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் நகர் மன்ற தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்தும், குடிநீர் வடிகால் வாரியத்தால் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்து நவம்பர் மாதத்திற்குள் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீவலப்பேரியில் இருந்து பகிர்மான குழாய் வழியாக கொண்டு வரப்படும் தாமிரபரணி குடிநீர் நேராக வன்னிமடையை வந்தடைகிறது. அங்கிருந்து முதல்கட்டமாக சாத்தூர் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது.
அடுத்த கட்டமாக சென்னல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சிக்கும் குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் பணிகள் முடிவடைந்து டிசம்பர் இறுதிக்குள் தாமிரபரணி குடிநீர் 3 நகராட்சிகளுக்கும் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், ஆணையாளர் அசோக்குமார், நகர் மன்ற துணைத்தலைவர் பழனிசாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி உள்பட பலர் உடனிருந்தனர்.