தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்குதான் தமிழ் உணர்வு அதிகம் - அமைச்சர் பொன்முடி
|தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்குதான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என அமைச்சர் பொன்முடி பேசினார்.
உலக தமிழ் மாநாடு
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு தமிழ் மொழி பண்பாட்டு கழகத்தின் சென்னை வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் ஆகியவை இணைந்து நடத்திய ஓரு நாள் பன்னாட்டு 'முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு' சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சோ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநாட்டின் தொடக்க விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'உலகெங்கும் கலைஞர்' என்னும் புத்தகத்தை வெளியிட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ் குமார், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு தமிழர்களுக்கு...
மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தமிழ்நாட்டில், கலை படிப்புகளில் தமிழை கொண்டு வந்தவர் அண்ணா. அறிவியல் படிப்புகளில் தமிழை கொண்டு வந்தவர் கலைஞர். பொறியியல் பாடத்திலும் தமிழை முதலில் கொண்டு வந்தவர் கலைஞர் தான். இப்போது, பொறியியல் கல்லூரியில் தமிழை பாடமாக கொண்டு வந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது. இது நாடு அறிந்த உண்மை. வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது தமிழினுடைய பெருமை தெரியவரும். வெளிநாடு மட்டுமல்ல வெளி மாநிலங்களுக்கு சென்றவர்களுக்கு கூட நம்மை விட தமிழ் உணர்வு அதிகம் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
தமிழ்மொழி உணர்வோடு ஒன்றுபடுவோம்
அந்த தமிழ் உணர்வை வளர்க்க வேண்டும் என்ற உணர்வோடு தான் உலகெங்கும் கலைஞர் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதை எல்லா மாணவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நாமும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 17 வெளிநாட்டினர் பேசியது இந்த புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்களே தமிழ் மொழி உணர்வோடு நாம் ஒன்றுபடுவோம், கலைஞர் என்ன நினைத்தாரோ அதை சென்றடைவோம், நாமெல்லாம் இளைஞர்களாக இருந்த பொழுது தமிழ் உணர்வு வளர்ந்தது, ஆனால் இன்றைய இளைஞர்களிடம் அது கேள்விக்குறியாக இருக்கிறது அதை வளர்க்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.